ஏழைகளின் நலனுக்காக எங்கள் அரசாங்கம் முக்கியத்துவம் அளித்துள்ளது - பிரதமர் மோடி பேச்சு
கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குஜராத்தின் பெருமை என மோடி பேசினார்.
காந்திநகர்,
குஜராத்தில் இன்று நடைபெற்ற 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார். நவ்சாரியில் நடைபெற்ற 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் சுமார் ₹ 3,050 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
அதை தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், "கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சி குஜராத்தின் பெருமை. ஏழைகளின் நலன் மற்றும் ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதில் எங்கள் அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை தாரக மந்திரமாக கொண்டு அரசாங்கம் செயல்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில், நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான முழுமையான அணுகுமுறையை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். சிகிச்சை வசதிகளை நவீனப்படுத்த முயற்சித்துள்ளோம், மேலும் சிறந்த ஊட்டச்சத்து, சுத்தமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியுள்ளோம்" என கூறினார்.