உடுப்பியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்

உடுப்பியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதனால் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.;

Update: 2022-06-12 14:33 GMT

மங்களூரு;

விபத்தில் மூளைச்சாவு

உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா கோகர்ணாவை சேர்ந்தவர் நவீன் (வயது 38). இவரது மனைவி மல்லிகா. இந்த நிலையில் நவீன் கடந்த 8-ந்தேதி மோட்டார் சைக்கிளில் கோகர்ணா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானதில் அவர் பலத்த காயமடைந்தார். பிரம்மாவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக உடுப்பி மணிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், நவீன் மூளைச்சாவு அடைந்தார். இதனை உறுதி செய்த டாக்டர்கள், இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

உடல் உறுப்புகள் தானம்

இதையடுத்து மனதை கல்லாக்கி கொண்டு நவீனின் மனைவி மல்லிகா மற்றும் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதுகுறித்து அவர்கள் மணிப்பால் மருத்துவமனை டாக்டர்களிடம் தெரிவித்தனர். நவீனின் குடும்பத்தினரின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்த டாக்டர்கள், அவரது உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து நவீனின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக பெற்றுக் கொண்டனர். இதையடுத்து மாநிலத்தில் உள்ள மற்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விவரங்களை கேட்டு அவற்றை அனுப்பி வைத்தனா்.

6 பேருக்கு மறுவாழ்வு

மங்களூரு, பெங்களூரு, மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகளுக்கு நவீனின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டன. நவீனின் உடல் உறுப்புகள் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். மூளைச்சாவு அடைந்த நவீனின் உடல் உறுப்புகளை தானம் செய்த அவரது குடும்பத்தினருக்கு டாக்டர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்