'அக்னிபத்' திட்டத்துக்கு எதிர்ப்பு: வட மாநிலங்களில் வன்முறை; ரெயில்களுக்கு தீவைப்பு

ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடைபெற்ற போராட் டத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

Update: 2022-06-18 00:22 GMT

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.

4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளை ஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

3-வது நாளாக போராட்டம்

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரெயில்களை தீயிட்டு கொளுத்தினர்.

நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள வீரி லார்க் மைதானத்தில் ஏராளமான இளைஞர்கள் திரண்டனர். அங்கிருந்து அவர்கள் பல்லியா ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்றனர். 'அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும்' என்று கோஷமிட்டபடியே சென்றனர்.

தீவைப்பு

ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தவுடன் அங்கு பயணிகள் இல்லாமல் காலியாக நின்று கொண்டிருந்த ஒரு ரெயிலுக்கு தீவைத்தனர். பல்லியா-வாரணாசி, பல்லியா-ஷாகஞ்ச் ஆகிய ரெயில்களை அடித்து சேதப்படுத்தினர்.

அங்கிருந்த ரெயில்வே குடோன் அருகே கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ரெயில் நிலைய நடைமேடையில் உள்ள தனியார் கடைகளையும் அடித்து நொறுக்கினர்.

போலீஸ் தடியடி

ரெயில் நிலையத்தின் ஒரு பகுதியை சூறையாடினர். ரெயில் நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த பஸ்களையும் தாக்கினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்கள் மீது தடியடி நடத்தினர். ஒருகட்டத்தில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு நடந்தது. இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதை வீடியோ படம் எடுத்து வைத்துள்ளனர்.

அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜ்கரண் நய்யார் தெரிவித்தார்.

பீகார்

பீகார் மாநிலத்தில் நேற்று போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது. போஜ்பூர் மாவட்டம் பிஹியா ரெயில் நிலையத்தில் புகுந்த போராட்டக்காரர்கள், டிக்கெட் கவுண்ட்டருக்கு தீவைத்தனர். இதில் ஒரு ஊழியரின் காலில் தீக்காயம் ஏற்பட்டது.

லக்கிசாரை ரெயில் நிலையத்தில் டெல்லி-பாகல்பூர் விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும், இன்னொரு ரெயிலுக்கும் தீவைக்கப்பட்டது. சமஸ்டிபூர் ரெயில் நிலையத்தில் டெல்லி செல்லும் டெல்லி-தர்பங்கா சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் உள்பட 2 ரெயில்களுக்கு தீவைத்தனர்.

தானாபூர், போஜ்பூர், வைஷாலி, நாளந்தா, சபால் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ரெயில் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

லக்கிசாரை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

துணை முதல்-மந்திரி வீடு மீது தாக்குதல்

பீகாரில் 19 மாவட்டங்களில் நேற்று போராட்டம் நடந்தது. தேசிய நெடுஞ்சாலைகளிலும், ரெயில் தண்டவாளங்களிலும் அமர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரெயில்கள் ஆங்காங்கே ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

தேசிய நெடுஞ்சாலைகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. டயர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

லக்கிசாரை மாவட்டத்தில் பா.ஜனதா அலுவலகம் தாக்கப்பட்டது. மேற்கு சம்பரன் மாவட்டத்தில் பேட்டியாவில் உள்ள பீகார் துணை முதல்-மந்திரி ரேணு தேவியின் இல்லம் மீது கல் வீசப்பட்டது. யாரும் காயம் அடையவில்லை. நேற்று பாட்னாவில் இருந்து பேட்டியா செல்வதாக இருந்த ரேணு தேவி, தனது பயணத்தை ரத்து செய்தார்.

பா.ஜனதா தலைவர் வீடு

அதே நகரில் உள்ள மாநில பா.ஜனதா தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலின் வீடு மீதும் கற்கள் வீசப்பட்டன. வீட்டை தீயிட்டு கொளுத்த முயன்றபோது, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பா.ஜனதா எம்.எல்.ஏ. வினய் பிஹாரியின் வாகனத்தை தாக்க முயற்சி நடந்தது. அவர் உயிர் தப்பினார்.

பெகுசாரை மாவட்டத்தில் ரெயில் நிலையத்தில் புகுந்த மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

124 ரெயில்கள் பல ரெயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டதாக கிழக்கு மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. முன்எச்சரிக்கையாக 45 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 17 ரெயில்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன.

ஐதராபாத்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் நேற்று வன்முறை தலைவிரித்தாடியது. சுமார் 350 பேர் கோஷமிட்டபடியே உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் அங்கு நின்றிருந்த 3 பயணிகள் ரெயில்களுக்கு தீவைத்தனர். இதில் பகுதி அளவுக்கு சேதம் ஏற்பட்டது. பார்சல் பெட்டியில் இருந்த பார்சல்களை வெளியே இழுத்துப்போட்டு தீயிட்டு கொளுத்தினர்.

நடைமேடையில் உள்ள அலுவலகத்துக்குள் புகுந்து கம்ப்யூட்டர்கள், மேசைகள், நாற்காலிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். அனைத்து நடைமேடைகளிலும் மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றை அடித்து உடைத்தனர்.

நடைமேடையில் உள்ள தனியார் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றையும் சேதப்படுத்தினர். சிக்னல்களை உடைத்தனர். அவர்களின் கல்வீச்சில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

மின்சார ரெயிலின் என்ஜின் பெட்டியில் ஏற முயன்றனர். ரெயில்வே அதிகாரிகள் முன்எச்சரிக்கையாக, மின்இணைப்பை துண்டித்தனர்.

துப்பாக்கி சூடு

ரெயில்வே போலீசார், போராட்டக்காரர்களை கலைக்க முதலில் தடியடி நடத்தினர். கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். பின்னர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 15 ரவுண்டு சுட்ட பிறகும் போராட்டக்காரர்கள் கலையாததால், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் பெயர் தாமோதர். மேலும் 10 பேர், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தனர்.

பலத்த காயம் அடைந்தவர்கள், செகந்திராபாத் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.20 கோடி சேதம்

ரெயில்வே டி.ஜி.பி. சந்தீப் சாண்டில்யா மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். தெற்கு மத்திய ரெயில்வே அதிகாரிகள் அவசர கூட்டம் நடத்தினர். ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தால், செகந்திராபாத்துக்கு வர வேண்டிய ரெயில்கள் பக்கத்து நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. அங்கிருந்து புறப்பட வேண்டிய ரெயில்கள் தாமதம் ஆகின. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் தவித்தனர். அவர்களை போலீசார் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர்.

இணையசேவை துண்டிப்பு

இதற்கிடையே, அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் பல்லப்கார் துணை கோட்டத்தில் செல்போன் இணையசேவை நேற்று துண்டிக்கப்பட்டது. சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் மாநில உள்துறை உத்தரவு பிறப்பித்தது.

இது நேற்று அதிகாலை அமலுக்கு வந்தது. 24 மணி நேரத்துக்கு இந்த தடை அமலில் இருக்கும். எஸ்.எம்.எஸ். அனுப்பவும் தடை விதிக்கப்பட்டது.

ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் போராட்டம் பரவியது.

340 ரெயில்கள் பாதிப்பு

தெற்கு ரெயில்வேயில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்ட ரெயில்கள், குறிப்பிட்ட நகரங்கள் வரை மட்டுமே இயக்கப்பட்டன. நேற்று நாடு முழுவதும் 94 மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 140 பயணிகள் ரெயில்கள் என மொத்தம் 234 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

95 ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டன. 11 மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருப்பி விடப்பட்டன. மொத்தத்தில் 340 ரெயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

பீகார், உத்தரபிரதேசம் அடங்கிய கிழக்கு மத்திய ரெயில்வே, சூழ்நிலையை பார்த்து, சில முக்கிய ரெயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

வன்முறை போராட்டத்தை கைவிடுமாறும், ரெயில்வே சொத்துகளை சேதப்படுத்த வேண்டாம் என்றும் இளைஞர்களுக்கு ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்