வாக்கு வங்கி அரசியலை வைத்து எதிர்க்கட்சிகள் விளையாடுகின்றன: பிரதமர் மோடி

மத்திய பிரதேசத்தில் தொண்டர்களிடையே பேசிய பிரதமர் மோடி பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

Update: 2023-06-27 10:22 GMT

போபால்,

மத்திய பிரதேசத்தில் போபால் நகரில் பொது கூட்டம் ஒன்றில் இன்று கலந்து கொண்ட பிரதமர் மோடி பா.ஜ.க. தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் முஸ்லிம் பெண்களுக்கு கடும் அநீதி இழைக்கிறார்கள். சமூக நீதியின் பெயரில் ஓட்டு கேட்பவர்கள் கிராமங்களுக்கும், ஏழைகளுக்கும் அதிகபட்ச அநீதி இழைத்துள்ளனர் என கூறியுள்ளார்.

அவர் பாஸ்மாண்டா முஸ்லிம்கள் குறித்து பேசும்போது, அவர்களின் உரிமைகளை அதிகாரம் பெற்ற முஸ்லீம்கள் பறித்ததால், அந்த சமூகம் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என பாஸ்மாண்டா முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி நேரடியாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார். பொது சிவில் சட்டம் ஆனது, அரசியல் அமைப்பில் வருங்காலத்தில் சாத்தியம் ஏற்படுவதற்கான வழிகளை கொண்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டும் இதனை அமல்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டு உள்ளது.

எனினும், பொது சிவில் சட்ட விவகாரம் ஆனது, சிலரால் தவறாக வழிநடத்த பயன்படுத்தப்பட்டு வருவதுடன், முஸ்லிம் சமூகத்தினரை தூண்டி விட்டும் வருகின்றனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பொது சிவில் சட்டம் என்ற பெயரால் சிலர் இன்று தூண்டி விடப்படுகின்றனர். ஒரு நாடு இரு சட்டங்களின்படி எப்படி செயல்பட முடியும்? அரசியலமைப்பும் சம உரிமைகளை பற்றி பேசி வருகின்றன.

ஆனால், இந்த மக்கள் (எதிர்க்கட்சிகள்) வாக்கு வங்கி அரசியலை வைத்து விளையாடி கொண்டு இருக்கின்றனர்.

பா.ஜ.க. ஒருபோதும் திருப்திப்படுத்தும் அரசியலை செய்யாது மற்றும் வாக்கு வங்கி அரசியலிலும் ஈடுபடாது என முடிவு செய்து உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்