சமூக நீதி பற்றி மட்டுமே பேசும் எதிர்க்கட்சிகள்: ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாஜக பாடுபடுகிறது - பிரதமர் மோடி

எதிர்க்கட்சிகள் சமூக நீதி பற்றி மட்டுமே பேசுகின்றன, ஆனால் ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாஜக பாடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Update: 2023-04-06 06:54 GMT

புதுடெல்லி,

பா.ஜ.க.வின் 44-வது நிறுவன நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கட்சி கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சமீபத்தில் டெல்லியில், புதிதாக கட்டப்பட்ட பா.ஜ.க. மத்திய அலுவலக (விரிவாக்கம்) திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பாஜக நிறுவன தினத்தையொட்டி கட்சி தொண்டர்களிடம் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்நாள் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டிய நாள். அனுமன் ஜெயந்தி கொண்டாடும் நாளில் இப்போது இருக்கிறோம். அனுமன் ஒரு தியாகி. இது போல் நாமும் இந்த நாட்டிற்கு உழைக்க வேண்டும். அனுமன் போல் பாஜக பிரதி பலன் பார்க்காமல் உழைக்கிறது. இந்தியா இப்போது எந்தவொரு சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது. 2014 முதல் இந்தியா புதிய உத்வேகத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது.

இந்த தேசத்தின் வளர்ச்சியே பாஜகவின் தாரக மந்திரம். தேசத்தின் வளர்ச்சியே எங்களின் முக்கிய நோக்கம். ஓட்டு வங்கி அரசியலை பாஜக விரும்புவதில்லை. சமூகநீதியே எங்களுக்கு முக்கியம். எதிர்கட்சிகள் சமூகநீதியை காப்பதுபோல் நாடகம் ஆடுகிறது. காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியல், இன வேறுபாடு வளர்த்தல் என்பதை பின்பற்றி வருகிறது.

ஏழைகளையும், மலைவாழ் மக்களையும் காங்கிரஸ் இழிவாக பார்க்கிறது. எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லாதவை. அக்கட்சிகளால் யாருக்கும் பயன் கிடைக்காது. என்னை வீழ்த்த எதிர்கட்சிகள் பொய் சொல்கிறது. பாஜகவை குறித்து தவறான பிரசாரத்தை எதிர்கட்சிகள் செய்து வருகின்றன.

என்னை குழி தோண்டி புதைப்பதையே எதிர்ட்சிகள் சிந்தித்து வருகின்றன. ஆனால் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர்கட்சிகளின் சதியும், பொய் பிரசாரமும் இதில் எடுபடாது.

காஷ்மீரின் அமைதி குறித்து கடந்த கால ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, 370 வது சட்ட பிரிவு குறித்து எதிர்கட்சியினர் தவறான பிரசாரம் செய்தனர். ஏழைகளுக்கு கழிப்பறை, இலவச வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். 80 கோடி பேருக்கு இலவச ரேசன் பொருட்கள் கொடுத்துள்ளோம். இது தான் சமூகநீதி. நாம் அனைத்து இந்தியர்களின் இதயங்களை வெல்ல வேண்டும். இதற்கு பாஜக நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்