கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-10-07 18:45 GMT

பெங்களூரு:

தேர்தல் வியூகங்கள்

கர்நாடக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

நாங்கள் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறோம். சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2023) நடக்கிறது. இதற்கு நாம் தயாராக வேண்டியுள்ளது. அதனால் இந்த கூட்டம் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் ஆகும். இதில் நமது தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டும். இந்த கூட்டத்தில் நமது அரசின் திட்டங்கள், அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

மிகுந்த நம்பிக்கை

பிற கட்சிகளில் ஜனநாயகம் இல்லை. நம் மீது மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. நமது பொறுப்பும் அதிகமாக உள்ளது. பிற கட்சிகளின் மோசமான செயல்பாடுகளால் அக்கட்சிகள் மீது மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன. இது வரும் நாட்களில் தெரியவரும். மத்திய-மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிகள் சிறப்பான முறையில் செயலாற்றி வருகின்றன.

தனிமனித சுதந்திரம், சமத்துவம், கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தில் நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டு செயலாற்றி வருகிறோம். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. 30 இடங்களில் வெற்றி பெற்ற ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆட்சி செய்ய காங்கிரஸ் ஆதரவு வழங்கியது. மக்களின் பெரும்பான்மையான ஆதரவில் ஆட்சி அமைய வேண்டும்.

போலி ஆவணங்கள்

தோ்தல் முடிவை புறக்கணித்துவிட்டு எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்தன. அதனால் அந்த ஆட்சி கவிழ்ந்தது. சமூக, பொருளாதார, கல்வியில் கர்நாடகம் வேகமாக வளர்ந்து வருகிறது. முன்பு காங்கிரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் ஊழல்கள், முறைகேடுகள் நடைபெற்றன. சிறிய நீர்ப்பாசனத்துறையிலும் 100 சதவீத ஊழல் நடைபெற்றது. ஒரே நாளில் 36 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டதாக போலி ஆவணங்களை தயாரித்து ஊழல் செய்தனர்.

மாணவர் விடுதிகளுக்கு படுக்கை, மெத்தை தலையணை கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றன. அதனால் ஊழல் ஒழிப்பு குறித்து பேசும் தகுதி காங்கிரசுக்கு இல்லை. பி.எப்.ஐ. அமைப்பு மீது இருந்த வழக்குகளை காங்கிரஸ் அரசு வாபஸ் பெற்றது. சொந்த கட்சி எம்.எல்.ஏ. வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதிய விமான நிலையம்

தாவணகெரே, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்