அக்னிபத் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு

விலைவாசி பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர், அக்னிபத் விவகாரத்தில் விவாதத்தை கோர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

Update: 2022-08-01 00:26 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

இந்த பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கக்கோரி அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளிலும் குறிப்பிடத்தக்க பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தொடர்ந்து ஒத்திவைக்கும் நிகழ்வுகளே நீடித்து வருகிறது.

எனவே எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிமடுக்கும் விதமாக விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மக்களவையில் இன்றும் (திங்கட்கிழமை), மாநிலங்களவையில் நாளையும் (செவ்வாய்க்கிழமை) இந்த பிரச்சினை விவாதத்துக்கு எடுக்கப்படுகிறது.

அக்னிபத் திட்டம்

இவ்வாறு விலைவாசி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டபின், அக்னிபத் திட்டத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. குறிப்பாக அடுத்த வாரத்தில் இந்த விவகாரத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளன.

எனினும் நாடாளுமன்ற தொடரில் இன்னும் வெறும் 10 நாட்களே உள்ளதால், இந்த பிரச்சினை மீது விவாதம் நடத்த முடியுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், 'அக்னிபத் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் நாங்கள் நிச்சயம் எழுப்புவோம். ஆகஸ்டு 12-ந் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடைந்தாலும், பதவி ஓய்வு பெறும் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவையின் அவைத்தலைவருமான வெங்கையா நாயுடுவுக்கு இந்த வார இறுதியில் பிரிவுபசார விழா போன்றவை நடைபெற்றாலும் அதற்கு இடையிலும் இந்த பிரச்சினையை விவாதிக்க நாங்கள் வலியுறுத்துவோம்' என்று தெரிவித்தார்.

மாறுபட்ட கருத்துகள்

அக்னிபத் பிரச்சினையை விவாதத்துக்கு கொண்டு வருவதில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலுடன் இருந்தாலும், இந்த பிரச்சினை தொடர்பாக அவர்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவது கவனிக்கத்தக்கது.

ஏனெனில் காங்கிரஸ் மற்றும் வடபிராந்திய கட்சிகள் அனைத்தும் அக்னிபத் திட்டத்தை முற்றிலும் திரும்பப்பெற வலியுறுத்தி வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அக்னிவீரர்களுக்கு பணி வழங்கும் பொறுப்பில் இருந்து மாநில அரசுகளை விடுவிக்க வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தி வருகின்றன.

இதனால் அக்னிபத் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எவ்வாறு ஒருங்கிணைந்து பங்குபெறும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்