எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: 2-வது நாளாக மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் 2-வது நாளாக முடங்கியது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. அவை தொடங்கியவுடன் இந்திய ஜனநாயகம் தொடர்பாக லண்டனில் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் நேற்று பா.ஜனதா, காங்கிரஸ் உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தநிலையியில், இன்றும் அதானி, ராகுல் விவகாரங்களை இரு அவைகளிலும் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் எழுப்பியதால் காலை முதலே கூச்சலும் குழப்பமும் நீடித்தது.
காலை 11 மணிக்கு அவை தொடங்கியவுடன் மக்களவையும், 12 மணிக்கு மாநிலங்களவையும் எம்.பி.க்களின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, உணவு இடைவெளிக்கு பிறகு அவைகள் கூடியவுடம் மீண்டும் அமளி தொடர்ந்ததால் நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாள் அலுவல்கள் அமளி காரணமாக முழுவதும் முடங்கின. மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
ராகுல்காந்தியின் லண்டன் பேச்சு, அதானி விவகாரம் உள்ளிட்டவைகளால் ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையில் கூச்சல், குழுப்பம் நிலவியது.