எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியை எதிர்த்து அமளியில் ஈடுபட்டதாக 14 எம்.பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அத்துமீறல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துமீறி நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசிய 2 பேர் உள்பட தொடர்புடையவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப் பட்டனர். இவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இன்று காலை அவை கூடியதும் இந்த பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.