ஆபரேசன் காவேரி; சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

ராணுவ மோதலில் சூறையாடப்பட்டு உள்ள சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-04-24 12:21 GMT

புதுடெல்லி,

சூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது என கூறப்பட்டது.

எனினும், அதனையும் மீறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால், சூடானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த பணியில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவியுடன் நேரிடையாக களத்தில் இறங்கி, தங்களது தூதர்கள் மற்றும் குடிமக்களை மீட்டு வருகின்றன.

இதுதவிர, சூடானில் சிக்கியுள்ள ஐரோப்பிய மற்றும் கூட்டணி நாடுகளின் குடிமக்களையும் பிரான்ஸ் அரசு மீட்டு வருகிறது. இதுவரை இந்தியர்கள் உள்பட 28 நாடுகளை சேர்ந்தவர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர் என்று டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் இன்று தெரிவித்து உள்ளது. எனினும், மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

சூடானில் இருந்து இந்தியர்கள் சிலர் உள்பட சகோதர மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் 66 பேரை வெளியேற்றி இருக்கிறோம் என சவுதி அரேபியா அரசும் நேற்று தெரிவித்து இருந்தது. இதேபோன்று சூடானின் தலைநகர் கார்ட்டூமில் இருந்து ஈராக், இந்தியா, எகிப்து, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், பர்கினாபசோ, கத்தார் உள்ளிட்ட நாட்டு மக்களை சவுதி அரேபிய அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர்.

இந்த நிலையில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ள செய்தியில், சூடானில் சிக்கி தவித்து வரும் நமது மக்களை மீட்டு கொண்டு வருவதற்காக ஆபரேசன் காவேரி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. சூடான் துறைமுகத்திற்கு 500 இந்தியர்கள் வரை வந்து சேர்ந்து விட்டனர். இன்னும் பலர் வந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களை இந்தியாவுக்கு திரும்பி வர அழைத்து வருவதற்காக நம்முடைய கப்பல்களும், விமானங்களும் தயாராக உள்ளன. நமது சகோதரர்கள் அனைவருக்கும் உதவிபுரிய உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்