அரபிக்கடலில் தரையிறங்கிய ஹெலிகாப்டரில் பயணித்த ஓஎன்ஜிசி பணியாளர்கள் பத்திரமாக மீட்பு!

ஓஎன்ஜிசி படகுகள் மற்றும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரும் கடலில் தத்தளித்தவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

Update: 2022-06-28 11:05 GMT

மும்பை,

மும்பையிலிருந்து அரபிக்கடல் வழியாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று அரபிக்கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) அரபிக்கடலில் பல எண்ணெய் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது, அவை கடலுக்கு அடியில் உள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 7 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று, மும்பை ஓஎன்ஜிசி ரிக் சாகர் கிரண் அருகே அரபிக்கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மும்பை கடற்கரையில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்தி நிலைய பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றது. ஆனால், இறங்க வேண்டிய இடத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ., தொலைவில், ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது.

மும்பையில் இருந்து அரபிக்கடலில் 7 கடல் மைல் தொலைவில் விபத்து நடந்த இடம் உள்ளது. கடலோர காவல்படை விமானம் மூலம், உயிர்காக்கும் மிதவை படகுகள் வழங்கப்பட்டன.அவர்கள் பயணித்த பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டரில் 7 ஓஎன்ஜிசி பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, ஓஎன்ஜிசி படகுகள் மற்றும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு கடலில் மிதந்தபடி தத்தளித்தவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.


தற்போது மீட்பு பணிகள் நிறவடைந்துள்ள நிலையில், ஹெலிகாப்டர் கடலில் இறக்கப்பட்டதால், அதில் பயணித்த ஒன்பது பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட நான்கு பேர் மருத்துவ சிகிச்சைக்காக கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் ஜூஹூ பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிர்ச்சேதமின்றி பிழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்குவதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. கடல் மேல் பயணிக்கும் இத்தகைய ஹெலிகாப்டர்களுடன் மிதவைகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மிதவைகளைப் பயன்படுத்தி ஹெலிகாப்டர் கடலில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்