நிபா வைரஸ் பாதிப்பால் ஒருவர் பலி - கேரள சுகாதாரத்துறை மந்திரி தகவல்

மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.;

Update: 2024-09-15 13:17 GMT

திருவனந்தபுரம்,

கடந்த 2018-ம் ஆண்டு மே 19-ந்தேதி கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 1-ந்தேதி உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையின்படி கேரளாவில் 18 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், அதில் 17 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முன்பாக இந்தியாவில் 2001 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் மேற்கு வங்காள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் பதிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நாட்டில் நிபா வைரஸ் பரவல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது வாலிபர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அந்த நபர் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு வந்திருந்த நிலையில், உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 9-ந்தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த வாலிபருடன் தொடர்பில் இருந்த அவரது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 5 பேருக்கு லேசான காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகவும், அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்