ஓலா, ஊபர் நிறுவனங்கள் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
கர்நாடக ஐகோர்ட்டில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.;
பெங்களூரு:-
கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் வாடகை சேவை வழங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களின் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மாநில போக்குவரத்து துறை சார்பில் கிலோ மீட்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.30 வசூலிக்கவும், சேவை கட்டணமாக 5 சதவீதம் மட்டும் வசூலிக்குமாறு கூறப்பட்டது. இதற்கிடையே கட்டண சேவையாக 10 சதவீதம் வசூலிக்கவும், மறுஉத்தரவு வரும்வரை இது செயல்பாட்டில் இருக்கும் எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் அரசின் 5 சதவீத சேவை கட்டண உத்தரவை எதிர்த்து ஓலா, ஊபர் நிறுவனங்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில் மத்திய அரசு 20 சதவீதம் சேவை கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் மாநில அரசு அதற்கு குறுக்கீடு செய்து அதை 5 சதவீதமாக மாற்றி உள்ளது. தற்போது ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ள 10 சதவீத சேவை கட்டணத்தால் வாடகை ஆட்டோக்களுக்கு லாபம் ஒன்றும் கிடையாது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது. ஓலா, ஊபர் நிறுவனங்கள் முன்தைய மனு தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வரும் நிலையில் தற்போது அந்த நிறுவனங்கள் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளன. இதனால் மாநில போக்குவரத்து துறை துரீத நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.