சபரிமலையில் ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: தரிசன நேரத்தை அதிகரிக்க கோரிக்கை

சபரிமலையில் ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர். சிரமமின்றி அய்யப்பனை தரிசிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-12-10 00:20 GMT

சபரிமலை,

மண்டல, மகர விளக்கு பூஜை நெருங்குவதையொட்டி சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்வதற்காக வருகை தரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

முன்பதிவு முறை, உடனடி பதிவு முறை மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் சபரிமலையில் திரண்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் 12 மணி நேரம் காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

கடந்த மாதம் 16-ந் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இதில் முதன் முறையாக ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலையில் நடை திறக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சன்னிதானத்துக்கு வந்து சாமியை தரிசனம் செய்துள்ளனர்.

பக்தர்கள் கோரிக்கை

சபரிமலையில் முதலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

கூட்டம் அதிகரிப்பின் காரணமாக தரிசன நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. அதாவது ஒரு நாளில் 18 மணி நேரம் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் அய்யப்பனை சரியாக தரிசனம் செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மேலும் போலீசாரின் கெடுபிடியும் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள். எனவே தரிசன நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கையையும் பக்தர்கள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்