மத்தியபிரதேசத்தில் புலி தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு: கோபமடைந்த மக்கள் வனத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

வயலுக்குள் சென்று மறைந்த புலி, திடீரென மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்து தாக்கிவிட்டு தப்பி ஓடியது.

Update: 2022-12-11 23:59 GMT

சியோனி,

மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகத்துக்கு அருகே கோண்டே என்கிற கிராமம் உள்ளது. நேற்று இந்த கிராமத்துக்குள் புகுந்த புலி ஒன்று, அங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றது. அங்கு தனது வீட்டின் பின்புறம் அமர்ந்து இளைப்பாறி கொண்டிருந்த சன்னிலால் படேல் என்கிற 55 வயது நபரை புலி அடித்து கொன்றது.

சன்னிலாலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். கூட்டத்தை பார்த்ததும் வயலுக்குள் சென்று மறைந்த புலி, திடீரென மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்து தாக்கிவிட்டு தப்பி ஓடியது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இது நடந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். புலியை பார்த்தால் அடித்து கொல்வதற்காக அவர்கள் இரும்புகம்பிகள், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றை கையில் வைத்திருந்தனர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள் கோண்டே கிராமத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் வனத்துறை அதிகாரிகள் மீது மரக்கட்டைகளை வீசி எறிந்தனர். இதில் பென்ச் புலிகள் காப்பகத்தின் கால்நடை டாக்டர் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் வனத்துறை அதிகாரிகளின் 6 வாகனங்கள் சூறையாடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்