இந்தியாவில் முதல் பிறந்த நாளுக்கு முன்பே 36 குழந்தைகளில் ஒரு குழந்தை இறக்கும் பரிதாபம்

இந்தியாவில் முதல் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு முன்பே 36 குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து விடுகிற பரிதாபம் நேருவதாக தெரிய வந்துள்ளது.;

Update: 2022-06-04 19:34 GMT

இறப்பு விகிதம்

இந்தியாவில் தற்போது சுகாதார கட்டமைப்பு பலமாக இருக்கிறது. நகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களில்கூட அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன.

ஆனாலும், பொதுவாக ஐ.எம்.ஆர். என்று அழைக்கப்படுகிற குழந்தை இறப்பு விகிதம்தான், ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார சூழலின் குறிகாட்டியாக பார்க்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிறக்கிற 1000 குழந்தைகளில், ஒரு வருட காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் இறக்கிறார்கள் என்பதின் அடிப்படையில்தான் இது தீர்மானிக்கப்படுகிறது.

36 குழந்தைகளில் ஒரு குழந்தை

அந்த வகையில், இந்திய தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள புதிய தரவுகள், நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகின்றன.

இந்த தரவுகள், இந்தியாவில் பிறந்து ஒரு வருடத்திற்குள் இறக்கிற குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் காட்டுகின்றன. 1971-ம் ஆண்டில் 1000 குழந்தைகளில் 129 குழந்தைகள், பிறந்த ஒரு வருடத்தில் இறந்துள்ளன. ஆனால் கடந்த 2020 நிலவரப்படி இந்த இறப்பு எண்ணிக்கை ஏறத்தாழ 4-ல் ஒரு பங்காக குறைந்துள்ளது. 1000 குழந்தைகளில் 28 குழந்தைகள் ஒரு வருடத்திற்குள் இறந்து விடுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 36 குழந்தைகளில் 1 குழந்தை, முதல் பிறந்த நாளை கொண்டாடுவதற்குள் இறந்து விடுகிற பரிதாப நிலை உள்ளது.

2020-ம் ஆண்டில் அதிகபட்ச எண்ணிக்கையாக மத்திய பிரதேச மாநிலத்தில் 1000-க்கு 43 குழந்தைகள், பிறந்த ஒரு வருடத்தில் இறந்துள்ளன. மிசோரமில்தான் குறைந்த எண்ணிக்கையாக 1000 குழந்தைகளில் 3 குழந்தைகள் ஒரு வருடத்துக்குள் இறந்துள்ளன.

பிறப்பு விகிதம் குறைவு

பிறப்புவிகிதம், மக்களின் கருத்தரிப்பு விகிதாசாரத்தை காட்டுகிறது. இது ஆயிரம் பேருக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்பதை வைத்து முடிவு செய்யப்படுகிறது.

50 ஆண்டுகளில் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிரடியாக குறைந்துள்ளன. 1971-ல் குழந்தைகள் பிறப்பு விகிதம் 36.9 ஆக இருந்துள்ளது. அது 2020-ல் 19.5 ஆக குறைந்திருக்கிறது. இது கிராமப்புறங்களில் 23.3-ல் இருந்து 21.1 ஆக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் 17.6-ல் இருந்து 16.1 ஆக சரிந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்