மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் - ராகுல்காந்தி
மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
போபால்,
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பீகார் மாநில அரசு நாட்டிலேயே முதன்முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 என தெரிய வந்துள்ளது.
அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் (27.12%) எனவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் (36.01%) எனவும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (19.65 %) எனவும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் (1.68 %) எனவும், பொதுப் பிரிவினர் 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் (15.52 %) எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மத்தியப்பிரதேசத்தில் கூறியதாவது:-
சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்ட பீகார் அரசுக்கும், முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கும் எனது நன்றி. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது இந்தியாவின் மிக முக்கிய விஷயங்களுள் ஒன்று. இதர பிற்படுத்தப்பட்டோர் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனவும், மக்கள்தொகைக்கு ஏற்றவாறு சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு இருக்கிறதா? எனவும் நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம்.
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக நான் கேள்வி எழுப்பும்போதெல்லாம் பாஜக அஞ்சி நடுங்குகிறது. பிரதமர் மோடி ஓடி ஒளிந்துகொள்கிறார், அமித்ஷா அதனை மதவாத பிரச்சினையாக மாற்றுகிறார். மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். என்று கூறினார்.