ஓணம் பண்டிகை: கேரளாவில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பணி தொடக்கம்
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது
பாலக்காடு,
கேரளாவில் அடுத்த மாதம் 8-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு 14 வகையான விலையில்லா உணவு பொருட்கள் வழங்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. சம்பந்தப்பட் ரேஷன் கடைகள் மூலம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பாலக்காடு மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று ஓணப்பை வாங்கி சென்றனர். பாலக்காடு மாவட்டத்தில் 57 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகிறது.
மேலும் ரேஷன் கடைகளுக்கு தங்களது ரேஷன் கார்டுகளை கொண்டு வந்து, பெண்கள் உள்பட பலர் விலையில்லா பொருட்களை பெற்று சென்றனர். சர்க்கரை, மிளகு, தேங்காய் எண்ணெய், முந்திரி பருப்பு, பாசி பருப்பு, துவரம் பருப்பு, கடுகு, சீரகம் உள்பட 14 பொருட்கள் உள்ளன. வருகிற 31-ந் தேதி வரை பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.