கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை, தூத்துக்குடிக்கு விமான டிக்கெட் கட்டணம் 5 மடங்கு உயர்வு
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பெங்களூருவில் இருந்து சென்னை, தூத்துக்குடிக்கு விமான டிக்கெட் கட்டணம் 5 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூரு, டிச.23-
கொச்சிக்கு ரூ.12 ஆயிரம்
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிற்குள்ளும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளன.
அதாவது பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் பொருளாதார வகுப்பில் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.12 ஆயிரமும், கோவாவுக்கு ரூ.15 ஆயிரத்து 700-ம், மங்களூருவுக்கு ரூ.11 ஆயிரத்து 200-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பயணிகள் ஆதங்கம்
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் சாதாரண நாட்களை விட தற்போது விமான கட்டணம் 5 மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். மற்ற நாட்களில் பெங்களூருவில் இருந்து கோவா, மங்களூருவுக்கு செல்ல விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,700 ஆகவும், கொச்சிக்கு ரூ.2,200 ஆகவும் இருந்தது. இதுதவிர சென்னை, ஐதராபாத் செல்லும் விமானங்களின் டிக்கெட்டும் உயர்த்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.4,164 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.19,808 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும் விமானங்களில் கூட்டம் நிரம்பி உள்ளது. பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம், கொச்சி, மங்களூரு ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் இருக்கைகள் நிரம்பி விட்டன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக பயணிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
கட்டணம் உயர்வு
இந்த நிலையில் தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கட்டண கொள்ளையை ஆரம்பித்து உள்ளன. அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 23-ந் தேதி, 24-ந் தேதி பெங்களூருவில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் டிக்கெட் கட்டணம் 4 முதல் 5 மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரெயில்கள், கர்நாடக அரசு பஸ்களில் டிக்கெட்டுகள் காலியானதால் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்லும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி அனீஸ் ஹெக்டே கூறும்போது, 'கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து உப்பள்ளி, கோயம்புத்தூர், மும்பை, பெலகாவி, உப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது.
மிரட்டி பணம் பறிக்கும் செயல்
தற்போது இயக்கப்படும் ரெயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைப்போம். தேவைப்பட்டால் சிறப்பு ரெயில்கள் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். கடந்த காலங்களில் பண்டிகையின் போது கூடுதல் ரெயில்களை இயக்கி உள்ளோம்' என்றார்.
கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் அன்புகுமார் கூறுகையில், 'பண்டிகை காலங்களில் அதிக பஸ்களை இயக்க நாங்கள் விரும்பிய போது தமிழ்நாடு, மராட்டிய மாநிலங்கள் பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பவில்லை. எனவே கூடுதல் பஸ்களை இயக்க முடியவில்லை. இந்த நேரத்தில் தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பது பணத்தை மிரட்டி பறிக்கும் செயல்' என்று கூறினார்.