நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை: பாகிஸ்தான் கருத்துக்கு இந்தியா கண்டனம்!
இங்கு பாகிஸ்தானை போல இல்லை.இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் உயர்ந்த மரியாதை அளிக்கிறது.;
புதுடெல்லி,
முகமது நபிகள் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து, அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஈரான், எகிப்து மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.
இந்நிலையில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரை நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே போல, பாகிஸ்தானும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:-
"நமது அன்புக்குரிய நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி இந்தியாவின் பாஜக தலைவரின் புண்படுத்தும் கருத்துக்களை நான் வலுவான வார்த்தைகளில் கண்டிக்கிறேன். இந்தியா மத சுதந்திரத்தை நசுக்குகிறது மற்றும் முஸ்லிம்களை துன்புறுத்துகிறது என்று திரும்பத் திரும்ப பாகிஸ்தான் சொன்னது.
உலக நாடுகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் மற்றும் இந்தியாவை கடுமையாக கண்டிக்க வேண்டும்" என்று அவர் தனது டுவிட்டர் பதில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் டுவீட் மற்றும் அதன் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை தொடர்பான ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:-
சிறுபான்மையினரின் உரிமைகளை தொடர்ந்து மீறி வரும் அவர்கள், மற்றொரு தேசத்தில் சிறுபான்மையினரை எப்படி நடத்துவது என்பது குறித்து கருத்து தெரிவிப்பது அபத்தம். பாகிஸ்தானால் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அகமதியாக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் எதிர்கொண்டு வரும் துன்புறுத்தலுக்கு மொத்த உலகமும் சாட்சியாக உள்ளது.
இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் உயர்ந்த மரியாதை அளிக்கிறது. இங்கு பாகிஸ்தானை போல இல்லை (பாகிஸ்தானில் மதவெறியர்களை புகழ்ந்து, அவர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் கட்டப்படுகின்றன).
பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக, இந்தியாவில் வகுப்புவாத நல்லிணக்கத்தைத் தூண்டுவதற்குப் பதிலாக அங்குள்ள சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்துமாறு பாகிஸ்தானை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.