விண்ணப்பதாரர்களின்வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்த பிறகே பி.பி.எல். ரேஷன் கார்டுகள் வழங்குவோம்-மந்திரி கே.எச்.முனியப்பா பேட்டி

விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்த பிறகே பி.பி.எல். ரேஷன் கார்டுகள் வழங்குவோம் என்று உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-04 22:18 GMT

பெங்களூரு:-

உணவு-பொது விநியோகத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குடும்ப அட்டைகள்

அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குவதற்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மாதம் தலா ரூ.170 வழங்கப்படுகிறது. அந்தியோத்தயா குடும்ப அட்டைகளுக்கு 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. அந்த குடும்ப அட்டைகளுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

கர்நாடகத்தில் 1.28 கோடி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கான குடும்ப (பி.பி.எல்.) அட்டைகள் உள்ளன. இதில் இதுவரை 1 கோடி குடும்பங்களுக்கு இதுவரை ரூ.566 கோடி பணம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் 3½ கோடி பேர் பயனடைந்துள்ளனர். பணம் வழங்கும் திட்டம் தொடங்கி 25 நாட்களில் ஒரு கோடி குடும்பங்களுக்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அரிசிக்கு பணம்

மீதமுள்ள 28 லட்சம் குடும்பங்களில் 5 லட்சத்து 32 ஆயிரத்து 349 குடும்பங்கள் மூன்று மாதங்களில் ஒரு மாதமாவது அரிசி வாங்காமல் விட்டவர்கள், அந்தியோதயா அன்ன குடும்ப அட்டைகளில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 425 குடும்பங்களில் 3 பேருக்கும் குறைவாக இருக்கிறார்கள். 19 லட்சத்து 27 ஆயிரத்து 226 குடும்பங்களுக்கு வங்கி கணக்கு இல்லை அல்லது வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காமல் உள்ளனர்.

வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களை நடத்தி ஏற்கனவே ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 502 பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைகளில் இருந்து இறந்த 3 லட்சத்து 64 ஆயிரத்து 51 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அரிசிக்கு பணம் திட்டம் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள ஒரு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உதவி மையத்திற்கு 5 ஆயிரத்து 603 அழைப்புகள் வந்துள்ளன.

பெயர் சேர்த்தல்

புதிதாக பி.பி.எல். குடும்ப அட்டைகள் கேட்டு 2 லட்சத்து 95 ஆயிரத்து 986 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவா்களின் வீடுகளுக்கு நேரில் ஆய்வு செய்து குடும்ப அட்டைகள் வழங்கப்படும். குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருத்தம் கோரி 3 லட்சத்து 18 ஆயிரத்து 907 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த பெயர் சேர்த்தல், நீக்கலுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும்.

அவசர மருத்துவ காரணங்களுக்காக புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும். ஆந்திராவில் உணவு தானியங்கள் பெறுவோருக்கு 'ஏ' குடும்ப அட்டையும், மருத்துவ சிகிச்சைக்கு 'பி' அட்டையும் வழங்கப்படுகிறது. அதேபோல் நமது மாநிலத்திலும் வழங்குவது தொடர்பாக ஒரு குழு அமைத்து ஆந்திராவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். அந்த குழுவின் அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் அதே மாதிரி திட்டம் கர்நாடகத்தில் அமல்படுத்தப்படும்.

ரத்து செய்வோம்

ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ராகி, வெள்ளை சோளம் கொள்முதல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தகுதியற்றவர்களிடம் பி.பி.எல். அட்டை இருக்கிறதா? என்பதை அறிய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு அவர்களிடம் அட்டை இருந்தால் அவற்றை கண்டறிந்து ரத்து செய்வோம்.

இவ்வாறு கே.எச்.முனியப்பா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்