ஒடிசா ரெயில் விபத்து: மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம்..!! அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
ஒடிசா ரெயில் விபத்தில் மின்சாரம் தாக்கி சில பயணிகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
புவனேஷ்வர்,
மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி விபத்துக்குள்ளாயின. உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 275 பேர் பலியாகினர். 1,100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. சிக்னலிங் துறையில் உள்ள எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
விபத்தின் பின்னணியில் நாசவேலை உண்டா? என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கும் பரிந்துரைத்து இருப்பதாக அவர் கூறினார். இதற்கிடையே 275 பேரை பலி கொண்ட இந்த ரெயில் விபத்து தொடர்பாக, ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சைலேஷ் குமார் பதக் தனது விசாரணையை நேற்று தொடங்கினார்.
இதனிடையே ரெயில் விபத்தில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ இன்று விசாரணையை தொடங்கி உள்ளது. கோரமண்டல் ரெயில் விபத்து நடந்த பகுதிக்கு 10 பேர் கொண்ட சிபிஐ குழு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் விபத்து நடந்த விதம், விபத்துக்கான காரணம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் விபத்து தொடர்பாக ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்தில் மின்சாரம் தாக்கி 40 பயணிகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரெயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட 40 பேரின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் தென்படவில்லை என்றும், மின்சார கேபிள் அறுந்து பெட்டிகள் மேல் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.