ஒடிசா ரெயில் விபத்து - பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் செல்போன்களை சி.பி.ஐ. கைப்பற்றியது..!

ஒடிசா ரெயில் விபத்தின்போது அங்கு பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்களின் செல்போன்களை சி.பி.ஐ. கைப்பற்றியது.

Update: 2023-06-08 01:48 GMT

புவனேசுவரம்,


ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் கேபிடல் ஆஸ்பத்திரி, சம் ஆஸ்பத்திரி, கிம் ஆஸ்பத்திரி, ஹைடெக் ஆஸ்பத்திரி, அம்ரி ஆஸ்பத்திரி ஆகியவற்றில் இருந்து கொண்டுவரப்பட்டு. குளிரூட்டப்பட்ட கண்டெய்னர்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு 162 பேரது உடல்கள் வந்துள்ளதாகவும், அவற்றில் 71 உடல்கள் அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

288 பேரை இதுவரை பலி கொண்ட இந்த சங்கிலித்தொடர் விபத்தின் பின்னணியில் நாசவேலை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ரெயில்வே வாரியத்தின் பரிந்துரையின் பேரில் இதில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணையில், ரெயில் விபத்துக்கு காரணம் நாசவேலைதானா என்பது தெரிய வரும்.

இந்த நிலையில் பாகாநாகா பஜார் ரெயில் நிலையத்துக்கு சி.பி.ஐ. குழுவினர் நேற்று சென்றனர். அஙகு அவர்கள் ஏறத்தாழ 45 நிமிடங்கள் இருந்து, விபத்து குறித்து விசாரணை நடத்தினர். மேலும், அந்த குழுவினர் சம்பவ பகுதியில் மெயின் லைன், லூப் லைன், சிக்னல் அறை, கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை தடய அறிவியல் துறை நிபுணர்கள், தொழில்நுட்ப குழுவினர் ஆகியோருடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அதிகாரிகள் சிலருடன் ஆலோசனையும் நடத்தினர்.

விபத்தின்போது பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் சிலரது செல்போன்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினார்கள். கைப்பற்றப்பட்ட செல்போன்களுக்கு வந்த அழைப்புகள் பற்றிய தரவுகள், வாட்ஸ் அப் அழைப்புகள், குறுந்தகவல்கள், சமூக ஊடக பயன்பாடு உள்ளிட்டவற்றில் சி.பி.ஐ. அதிகாரிகளின் கழுகுப்பார்வை விழுந்து, விசாரணை வளையம் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்