ஒடிசா ரெயில் விபத்து; பலி எண்ணிக்கை 261 ஆக உயர்வு: பிரதமர் மோடி ஒடிசா பயணம்

ஒடிசா ரெயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்து, மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன.;

Update: 2023-06-03 09:08 GMT

புதுடெல்லி,

ஒடிசாவில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதியுள்ளன. பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதேபோல், மேற்கு வங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே நேற்று இரவு 7 மணியளவில் பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த ரெயில் தடம் புரண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட அந்த ரெயிலின் பெட்டிகள் சில அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தன.

அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.

அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயில், 1 சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் மீட்பு நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருகிறது.

தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம் உள்பட பல்வேறு துறையினரும் மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதனிடையே, மீட்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழுவை அண்டை மாநிலமான மேற்கு வங்காள அரசு நேற்று இரவே ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தது.

ஒடிசாவில் 3 ரெயில்கள் விபத்தில் சிக்கியது பற்றிய நிலைமையை நேரில் அறிய பிரதமர் மோடி ஒடிசாவுக்கு இன்று புறப்பட்டு சென்று உள்ளார். இதனை பிரதமர் அலுவலகமும் டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளது.

அதற்கு முன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட உயர்மட்ட கூட்டம் ஒன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

ஒடிசாவில் ரெயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி நேற்று ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்.

இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் 650 பேர் கோபால்பூர், கந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ நகர மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என தென்கிழக்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, மீட்பு பணியை மேற்கொள்ள இந்திய விமான படையின் மி-17 ரக ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. முதலில் வெளியான, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் அறிக்கையின்படி, 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன. தொடர்ந்து, அந்த பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்