ஒடிசா; கொல்லப்பட்ட தந்தையின் பிறந்த நாளில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற மகள்

ஒடிசாவில் சுட்டு கொல்லப்பட்ட சுகாதார மந்திரியின் பிறந்த நாளில் அவரது மகள் தீபாளி தாஸ் எம்.எல்.ஏ.வாக பதவியேற்று கொண்டார்.

Update: 2023-05-15 13:37 GMT

புவனேஸ்வர்,

ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் நபா கிஷோர் தாஸ். இவர் குறைதீர்ப்பு அலுவலக கட்டிட திறப்பு விழா ஒன்றில் பங்கேற்க சென்றபோது, அவருக்கு காவலுக்கு வந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த படுகொலைக்கான காரணம் என்னவென தெரிய வரவில்லை. இந்த நிலையில், பிரஜ்ராஜ்நகர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியானது.

அதில், உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு மந்திரியை கொலை செய்யும் தெளிவான நோக்கம் இருந்தது என்று பிரஜ்ராஜ்நகர் போலீஸ் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் பிரதும்ன்ய குமார் ஸ்வைன் கூறினார்.

ஆனால், கொலைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அதே சமயத்தில், உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர்கள், 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மனநல நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியின் மூத்த தலைவராக இருந்த கிஷோர் தாஸ், 145 கார்களுக்கு உரிமையாளர் ஆவார்.

கோடீஸ்வரரான அவர், ஆரம்ப காலகட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்திலும், பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தும் பணியாற்றினார். சுரங்கம், போக்குவரத்து தொடர்பான தொழில்களை நடத்தி வந்துள்ளார். ஜார்சுகுடா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 முறை எம்.எல்.ஏ ஆனவர்.

கடந்த 2019-ம் ஆண்டு திடீரென பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்து, சட்டசபை தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இந்த தேர்தலுக்கான அவரது வேட்பு மனுவில், தனக்கு ரூ.34 கோடி மதிப்புள்ள அசையா மற்றும் அசையும் சொத்துகள் உள்ளன என்றும் மொத்தம் 145 கார்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இவரது மகள் தீபாளி தாஸ். தந்தையின் மறைவை தொடர்ந்து, ஜார்சுகுடா தொகுதியில் போட்டியிட்டு சமீபத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, தனது தந்தையின் பிறந்த நாளான இன்று அவர் பதவியேற்று கொண்டார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, எனக்கு இது ஒரு உணர்ச்சிபூர்வ தருணம். அவரது பிறந்த நாளில் நான் பதவியேற்று உள்ளேன். ஜார்சுகுடா மக்களின் நலன்களை எப்போதும் கவனத்தில் கொள்வேன் என்று முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு நான் வாக்குறுதி அளித்து இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

அவர், தனது தொகுதியின் மக்களுக்கு சேவையாற்றுவேன் என கூறி பதவியேற்று கொண்டதுடன், அனைத்து விதிகள் மற்றும் அரசியல் சாசன கொள்கைகளுக்கு உட்பட்டு நடப்பேன் என்றும் கூறினார்.

தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரான தங்காதர் திரிபாதியை 48,721 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 198 வாக்குகளை தீபாளி தாஸ் பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்