மக்கள் குறைகேட்க ஐ.ஏ.எஸ். அதிகாரியை அனுப்பிய ஒடிசா முதல்-மந்திரி : எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஒடிசாவில் மக்கள் குறை கேட்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரியான தனது தனிச்செயலாளரை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அனுப்பி வைத்தார். அதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

Update: 2023-06-27 21:22 GMT

கோப்புப்படம்

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதளம் ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு மாநிலம் முழுவதும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த கூட்டங்களுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேரில் செல்வது இல்லை.

தனது தனிச்செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியனை அனுப்பி வைத்து வருகிறார். நவீன் பட்நாயக் அனுமதியுடன்தான் வி.கே.பாண்டியன் கலந்து கொள்கிறாரா? என்று பா.ஜனதா எம்.பி. அபராஜிதா சாரங்கி சமீபத்தில் கேள்வி விடுத்தார்.

மேலும், பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலம் நடத்தை விதிமுறைகளை வி.கே.பாண்டியன் மீறி வருவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

செல்போன் வழியே பேசினார்

இந்நிலையில், பர்கார் மாவட்டம் பர்பாலியில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் தனிச்செயலாளர் வி.கே.பாண்டியன் பங்கேற்றார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட நவீன் பட்நாயக், செல்போன் மூலம் பொதுமக்களிடையே பேசினார். தங்கள் குறைகளை வி.கே.பாண்டியனிடம் சொல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

செல்போனை 'மைக்' முன்பு வைத்து, முதல்-மந்திரியின் உரையை அனைவரும் கேட்குமாறு வி.கே.பாண்டியன் செய்தார்.

பின்னர், கடும் மழையையும் பொருட்படுத்தாமல், பர்காரில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அவர்களிடம் வி.கே.பாண்டியன் குறை கேட்டார். அங்குள்ள ஒரு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடினார்.

அதிகாரிகள் ராஜ்யம்

திருமண மண்டபங்களிலும் பொதுமக்களை சந்தித்து குறை கேட்டார். கோவில்களுக்கு சென்று கோவில் வளர்ச்சி மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் பற்றி கேட்டறிந்தார்.

பர்காரில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் ஆஸ்பத்திரி, டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று உறுதி அளித்தார். மக்களை தொடர்பு கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டு இருப்பதாக அவர் கூறினார்.

அதே சமயத்தில், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பங்களிப்பு குறைக்கப்பட்டு, அதிகாரிகள் ராஜ்யம் நடப்பதாக பா.ஜனதா எம்.பி. சுரேஷ் பூஜாரி குற்றம்சாட்டி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்