ஒடிசா: மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு; முதல்-மந்திரிக்கு என்னென்ன இலாகாக்கள்?

ஒடிசாவின் முதல் பெண் துணை முதல்-மந்திரியான பிரவதி பரீடாவுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை, மிஷன் சக்தி மற்றும் சுற்றுலா மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.;

Update:2024-06-16 02:14 IST

புவனேஸ்வர்,

ஒடிசாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 147 இடங்களில் 78 இடங்களை கைப்பற்றி, பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதனால், பிஜு ஜனதா தள கட்சியின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து, பா.ஜ.க.வை சேர்ந்த மோகன் சரண் மஜி, முதல்-மந்திரியாக கடந்த 12-ந்தேதி பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில், அவருடைய தலைமையிலான மந்திரி சபையில் மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதன் முடிவில், மொத்தம் 8 மந்திரிகள் மற்றும் 5 இணை மந்திரிகள் பதவியேற்று கொண்டனர். முதல்-மந்திரியின் அறிவுறுத்தலின் பேரில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இதில் முதல்-மந்திரி மோகன் சரண், உள்துறை மந்திரி பதவியை தனக்கு வைத்து கொண்டார். இதுதவிர, பொது நிர்வாகம் மற்றும் மக்கள் குறைதீர்ப்பு துறை, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை, நீர்வளம், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு துறை ஆகியவற்றையும் அவர் வைத்து கொண்டார்.

துணை முதல்-மந்திரி கனக் வர்தன் சிங் தேவுக்கு விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் எரிசக்தி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்றொரு துணை முதல்-மந்திரி பிரவதி பரீடாவுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை, மிஷன் சக்தி மற்றும் சுற்றுலா மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவை தவிர முக்கிய துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் துறை சுரேஷ் புஜாரிக்கும், ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ரபி நாராயண் நாயக்கிற்கும், பள்ளி கல்வி துறை நித்யானந்த் கோண்டுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. ஒடிசாவின் முதல் பெண் துணை முதல்-மந்திரி என்ற பெருமையை பரீடா பெறுகிறார்.

முதல்-மந்திரி மோகன் சரண் தலைமையிலான மந்திரிசபையில், வெவ்வேறு துறைகளை மந்திரிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு கவர்னர் ரகுபர் தாஸ் ஒப்புதல் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்