பட்டுப்புழுக்களை கொல்லாமல் 'கருணை பட்டு' ஒடிசாவில் அறிமுகம்
பட்டுப்புழுக்கள் உருவாக்கும் கூட்டில் இருந்து பட்டு இழைகளைப் பெறுவதற்கு, வெந்நீர் அல்லது நீராவியால் பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன.;
புவனேஸ்வர்,
பெண்கள் விரும்பி அணியும் அழகிய பட்டுப் புடவைகளுக்கு பின்னே ஒரு சோகம் புதைந்துள்ளது. அதாவது ஒரு பட்டுப் புடவை தயாரிப்பதற்கு, 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன.
பட்டுப்புழுக்கள் உருவாக்கும் கூட்டில் இருந்து பட்டு இழைகளைப் பெறுவதற்கு, வெந்நீர் அல்லது நீராவியால் பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. இல்லாவிட்டால் பட்டுப்புழு பூச்சியாகி, கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறிவிடும். அதனால், பட்டு இழைகள் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துவிடும்.
ஆனால் அவ்வாறு பட்டுப்பூச்சி வெளியேறிய பிறகும் உள்ள பட்டு இழைகளை பயன்படுத்தி பட்டு ஆடைகளை உருவாக்கும் நுட்பத்தை ஒடிசா மாநில கைத்தறி, ஜவுளி மற்றும் கைவினைத்துறை உருவாக்கியுள்ளது.
'கருணை பட்டு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பட்டு பலதரப்பினரையும் கவர்ந்துள்ளதாகவும், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சியிலும் ஒடிசா அரங்கில் இது பலரை ஈர்த்ததாகவும் அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்டுப்புழுக்களைக் கொல்வதற்குப் பதிலாக கருணை நடவடிக்கையில் ஈடுபடுவதால் புதிய பட்டுக்கு 'கருணா சில்க்' என்று பெயரிடப்பட்டுள்ளது என்று அதிகாரி கூறினார்.
"எங்கள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் எப்போதும் அகிம்சையின் கருத்துகளை ஊக்குவிப்பதோடு, அனைத்து உற்பத்தி செயல்முறைகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். எனவே பட்டுப்புழுக்களைக் கொல்லும் 'பிலமென்ட் சில்க்' என்ற பாரம்பரிய முறையை உடைத்து இரக்கத்தை ஊக்குவிக்க விரும்புகிறோம்.
புதிய செயல்பாட்டில், அந்தப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியை மதிக்கும் வகையில் நாங்கள் அதை விட்டுவிடுகிறோம் என ஒடிசா மாநில கைத்தறி, ஜவுளி மற்றும் கைவினைத்துறை அதிகாரி இயக்குநர் ஷோவன் கிருஷ்ணா சாகு கூறியுள்ளார்.