கேரள கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு: பிஷப் பிராங்கோ முலக்கல் மீண்டும் அருட்பணிக்கு திரும்ப வாடிகன் திருச்சபை ஒப்புதல்

கேரள பாதிரியார் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் கடந்த ஜனவரி 14ம் தேதியன்று கோர்ட்டால் பிராங்கோ முலக்கல் விடுதலை செய்யப்பட்டார்.

Update: 2022-06-12 14:25 GMT

திருவனந்தபுரம்,

கேரளா மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கேரள பாதிரியார் பிராங்கோ முலக்கல் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் கடந்த ஜனவரி 14ம் தேதியன்று கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் பிஷப் பிராங்கோ முலக்கல். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயர் ஆக அவர் இருந்தார்.

இந்நிலையில், இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். பிராங்கோவை கைது செய்யக்கோரி அந்த மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் பிஷப் பிராங்கோ முலக்கல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன்பின் பிஷப் பிராங்கோ முலக்கல்லை ஜாமினில் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த பாலியல் புகார் தொடரப்பட்டதிலிருந்து, செப்டம்பர் 2018 இல், வாடிகன் திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களால் மறைமாவட்டப் பொறுப்புகளில் இருந்து பிஷப் பிராங்கோ முலக்கல் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை கோட்டயத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பு தவறியதாக கூறி, பிஷப் பிராங்கோ முலக்கல்லை இந்த வழக்கிலிருந்து விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

கேரள கோர்ட்டின் தீர்ப்பை வாடிகன் திருச்சபை ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து, முன்னாள் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முலக்கல் ஆயர் பணிகளுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிஷப் பிராங்கோ முலக்கல் ஜலந்தர் மறைமாவட்டத்திற்கு நேற்று சென்ற போது, இந்தியா மற்றும் நேபாளத்தின் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் லியோபோல்டோ கிரெல்லி, வட இந்திய மறைமாவட்ட பாதிரியார்களுக்கு இந்த செய்தியை தெரிவித்தார். எனினும், பிஷப் பிராங்கோ முலக்கல், மீண்டும் ஜலந்தர் மறைமாவட்டத்திற்கு பிஷப்பாக பணியாற்றுவாரா என்பது திருத்தந்தையின் முடிவை பொறுத்தே அமையும் என்று அவர் கூறினார்.

பிஷப்பால் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறும் கன்னியாஸ்திரி, இந்த வழக்கில் இருந்து பிராங்கோ மூலக்கல்லை விடுவித்த விசாரணை நீதிமன்றத்திற்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். கன்னியாஸ்திரி ஜலந்தர் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள மறைமாவட்ட சபையான மிஷனரிஸ் ஆப் ஜீசஸின் உறுப்பினராக உள்ளார்.

கோட்டயத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான 4 மாதங்களுக்கு பின், இப்போது பிஷப் பிராங்கோ முலக்கல் மீண்டும் அருட்பணிக்கு திரும்ப, வாடிகன் திருச்சபை அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்