அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு
2023-2024 ம் ஆண்டு நடைபெற உள்ள பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.;
புதுடெல்லி,
2023-2024 ம் ஆண்டு நடைபெற உள்ள பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
அதன்படி பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ (JEE) மெயின் தேர்வின் முதல் கட்ட அமர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும் என்றும் 26-ந்தேதி தேர்வு நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதம் 6,8,10,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூட் தேர்வு (CUET) மே மாதம் 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் (NEET) தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.