சீன மொழி தெரிந்தவர்கள் பிராந்திய ராணுவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
சீன மொழி தெரிந்தவர்கள், பிராந்திய ராணுவத்தில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்திய ராணுவம் தரைப்படை, கடற்படை, விமானப்படை எனும் முப்பிரிவுகளாகச் செயல்படுகிறது. உள்நாட்டிற்குள் ஏற்படும் சமூக விரோதச் செயல்களை அடக்குவதற்காகத் துணை ராணுவப் படைகள் செயல்பட்டுவருகின்றன. இந்த ராணுவ அமைப்புகளுக்கு உதவிக்கரமாக செயல்படும் வகையில் 'டெரிட்டோரியல் ஆர்மி' எனும் 'பிராந்திய ராணுவ' அமைப்பு இயங்குகிறது.
இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் சார்பில் முதல் முறையாக, சீன மொழியான 'மேண்டரின்' மொழி தெரிந்தவர்கள், பிராந்திய ராணுவத்தில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சீன மொழியில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்களை jointerritorialarmy.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். சீன ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தும் போது, சீன மொழி தெரிந்த பிராந்திய ராணுவ அதிகாரிகளை பயன்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.