விரைவு கோர்ட்டுகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை - மத்திய சட்ட மந்திரி

விரைவு கோர்ட்டுகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று மத்திய சட்ட மந்திரி கூறினார்.

Update: 2023-03-02 16:44 GMT

மாநாடு

டெல்லியில், தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்பாடு செய்த 'குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான' மாநாடு தொடங்கியது. மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார். தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி அருண்குமார் மிஸ்ரா மற்றும் உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு பாதுகாப்பான இணைய உலகத்தை உருவாக்குவது குறித்து விவாதித்து சிபாரிசுகளை மேற்கொள்வதே மாநாட்டின் நோக்கம்.

திருப்தி இல்லை

மாநாட்டில், கிரண் ரிஜிஜு பேசியதாவது:- கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம், கோர்ட்டுகளில் நிலுவையில் இருந்த வழக்குகளை கருத்தில்கொண்டு, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,023 விரைவு தனி கோர்ட்டுகள் அமைக்க மத்திய நீதித்துறை ஒப்புதல் அளித்தது. இவற்றில், 'போக்சோ' வழக்குகளுக்கான 389 கோர்ட்டுகளும் அடங்கும்.

இதுவரை 28 மாநிலங்களில் 769 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை இதுவரை 1 லட்சத்து 37 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளன. இருப்பினும், எனக்கு தனிப்பட்ட முறையில், விரைவு கோர்ட்டுகளின் செயல்பாடுகள் அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. அவற்றின் ஒட்டுமொத்த செயல்பாட்டை அதிகரிக்க குற்றவியல் நடைமுறை சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றை கண்டிப் புடன் பின்பற்ற வேண்டும். விசாரணை அமைப்புகளையும், தடயவியல் ஆய்வகங்களையும் வலுப்படுத்த வேண்டும்.

சிறப்பாக பணியாற்றுங்கள்

விரைவில் நடக்க உள்ள தலைமை நீதிபதிகள் மற்றும் முதல்-மந்திரிகள் மாநாட்டில் இதுபற்றி விவாதிக்க தனி அமர்வு நடத்த வேண்டும். ஏனென்றால், அரசும், நீதித்துறையும் இணைந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும். நான் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. சில மாநில அரசுகளும், ஐகோர்ட்டுகளும் சரியாக செயல்படவில்லை. அந்த மாநில முதல்-மந்திரிகளும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளும் இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஒவ்வொருவரின் மனசாட்சியை உலுக்கக்கூடியவை. அதனால்தான், நிறைய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறு பிரதமர் மோடி ஒவ்வொரு துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்