'சாதி, மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது' - அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.;
புதுடெல்லி,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதற்கான ஆயுத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் சில நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தற்போது தேர்தல் பிரச்சார பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதன்படி சாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது என்றும், மத வழிபாடு அல்லது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் அல்லது பிற வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் கட்சிகள், வேட்பாளர்கள் அல்லது நட்சத்திரப் பேச்சாளர்கள் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சிகள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் வகையில் பிரச்சாரத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் ஆதாரமற்ற தகவல்களின் அடிப்படையில் வாக்காளர்களை தவறாக வழிநடத்தக்கூடாது என்றும், சமூக ஊடகங்களில் எதிர்கட்சியினரை அவமதிக்கும் வகையில், கண்ணியம் குறைவான பதிவுகளை வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.