இது மோடியின் தேர்தல் அல்ல.. காங்கிரசின் வெற்றி உறுதி: அசோக் கெலாட் நம்பிக்கை

பாஜகவினருக்கு தோல்வி உறுதி என தெரிந்துவிட்டதால் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்று அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் தெரிவித்தார்.

Update: 2023-11-25 08:18 GMT

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. முதல் மந்திரி அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் கூறியதாவது:-

ராஜஸ்தானில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை இல்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். பா.ஜனதா தலைவர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து பிரசாரத்திற்காக வந்தவர்கள். அடுத்த ஐந்தாண்டுக்கு அவர்களை இங்கு பார்க்க முடியாது. இது மோடியின் தேர்தல் இல்லை. இது மாநில சட்டசபை தேர்தல். நாங்கள் இங்கேதான் இருப்போம். அதோடு மக்களோடு இருப்போம்

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், பாஜகவினருக்கு தோல்வி உறுதி என தெரிந்துவிட்டதால் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்றும் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் தெரிவித்தார். கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் அரசு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் இன்று 199 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் காலமானதால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்