பையப்பனஹள்ளி ரெயில் முனையத்தில் சிக்கி தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்

ஒடிசா ரெயில் விபத்தால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் திணறிய வட மாநில தொழிலாளிகள் பையப்பனஹள்ளி ரெயில் முனையத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

Update: 2023-06-04 18:45 GMT

பெங்களூரு:-

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து காரணமாக பெங்களூருவில் இருந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் செல்ல வேண்டிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பையப்பனஹள்ளியில் உள்ள சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் முனையத்தில் இருந்து ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய தொழிலாளர்கள், அங்கேயே தங்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. கடந்த 2-ந் தேதி ரெயில் நிலையத்திலேயே அவர்கள் தங்கினார்கள். நேற்று முன்தினமும் ரெயில்கள் ஓடாததால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் இருந்தனர். இதையடுத்து, பையப்பனஹள்ளி ரெயில் முனையத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதிககளை செய்து கொடுக்கும்படி மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்திற்கு, முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் ரெயில் முனையத்தில் தங்கி இருக்கும் தொழிலாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனமும், மாநகராட்சியும் சேர்ந்து உணவு பொருட்கள், தண்ணீர் வழங்கினார்கள். இந்த நிலையில் நேற்று காலை, மதியம் 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு தின்பண்டங்களும் வழங்கப்பட்டது. அங்கு காத்திருந்த பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக உணவு இன்றி தவித்த தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்