கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு; மொத்தம் 3,632 பேர் மனு தாக்கல்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதிநாளில் வேட்பாளர்கள் குவிந்ததால் தேர்தல் அலுவலகங்கள் பரபரப்பாக செயல்பட்டன. ஒட்டு மொத்தமாக 3,632 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2023-04-20 22:02 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சியில் உள்ளது. இந்த அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் புதியதாக 16-வது சட்டசபை தேர்வு செய்வதற்காக கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பா.ஜனதா கட்சி 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் மேல்கோட்டை தொகுதியில் விவசாய கட்சி சார்பில் போட்டியிடும் தர்ஷன் புட்டண்ணய்யாவுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. அதுபோல் ஜனதாதளம் (எஸ்) கட்சியும் சுமார் 200 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இந்த சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் 221 பேர் மனு தாக்கல் செய்தனர். மறுநாள் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் அதாவது 15-ந் தேதி 200 பேர் மனு தாக்கல் செய்தனர். 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். 17-ந் தேதி வேட்புமனு தாக்கல் மீண்டும் தொடங்கியது. அன்று முதல் தினமும் ஏராளமானவர்கள் மனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.

நேற்று கடைசி நாள்

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் ஆகும். இதனால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய மாநகராட்சி அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்கள் தொண்டர்களுடன் படையெடுத்தனர். இதனால் தேர்தல் அலுவலகங்கள் அரசியல் கட்சி தொண்டர்களாக காட்சி அளித்தது..

கடைசி நாளான நேற்று பெலகாவி மாவட்டம் யமகனமரடி தொகுதியில் கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜாா்கிகோளி மனு தாக்கல் செய்தார். கடவுள் நம்பிக்கை இல்லாதவரான அவர் ராகு காலத்தில் மனு தாக்கல் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மற்ற வேட்பாளர்களை போல் மனு தாக்கலுக்கு முன்பு ஊர்வலம் எதையும் நடத்தவில்லை. ஆதரவாளர்களுடன் நேரடியாக தேர்தல் அலுவலகத்திற்கு வந்து மனு தாக்கல் செய்துவிட்டு சென்றார்.

வேட்பு மனு தாக்கல் நிறைவு

கனகபுரா தொகுதியில் டி.கே.சிவக்குமாருக்கு மாற்றாக அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் மனு தாக்கல் செய்தார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருக்கு எதிராக பா.ஜனதா வேட்பாளர் மகேஷ் தெங்கினிகாய் மனு தாக்கல் செய்தார். சி.வி.ராமன்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தமிழரான ஆனந்த குமார் மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். அதுபோல் மாநிலம் முழுவதும் நேற்று இறுதி நாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் தொண்டர்கள், ஆதரவாளர்கள் புடை சூழ ஊர்வலமாக வந்து தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய வேட்பு மனு தாக்கல் மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளில் மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்ததால், 3 மணிக்குள் வந்தவர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் மனு தாக்கல் செய்தனர். அத்துடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

3,632 பேர் மனு தாக்கல்

கா்நாடகத்தில் ஒட்டுமொத்த மொத்தம் 3,632 பேர் 5,102 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பா.ஜனதா சார்பில் 707 மனுக்களும், காங்கிரஸ் சார்பில் 651 மனுக்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 455 மனுக்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 373 மனுக்களும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 179 மனுக்களும் தாக்கல் ஆகியுள்ளன.

இதில் 3,,327 ஆண்களும், 304 பெண்களும், ஒரு திருநங்கையும் அடங்குவர். ஒட்டுமொத்தமாக 1,720 சுயேச்சைகளும், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 1,007 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல்

இன்று (வெள்ளிக்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. இதில் சட்டப்படி நிரப்பப்பட்டுள்ள மனுக்கள் ஏற்று கொள்ளப்படும். விதிகளுக்கு உட்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.

மனுக்களை வாபஸ் பெற வருகிற 24-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். அதன் பிறகு தேர்தல் களத்தில் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட தொடங்குவார்கள்.

பிரதமர் மோடி-ராகுல் காந்தி

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி வருகிற 29-ந் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அவர் ஓட்டு சேகரிக்கிறார்.

அதே போல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்களும் கர்நாடகம் வரவுள்ளனர். அதுபோல் ஜனதாதளம் (எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவேகவுடா, மூத்த தலைவர் எச்.டி.குமாரசாமி, எச்.டி.ரேவண்ணா உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்