பார்ட்டியில் தகராறு.. கல்லூரி மாணவனை கொன்று வயலில் புதைத்த நண்பர்கள்

பல்கலைக்கழக சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து விசாரித்தபோது இந்த வழக்கில் துப்பு துலங்கியது.

Update: 2024-02-29 05:29 GMT

புதுடெல்லி:

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் யாஷ் மிட்டல். இவர் கடந்த திங்கட்கிழமை விடுதியில் இருந்து சென்றார். ஆனால் விடுதிக்கு திரும்பவில்லை. அவரை கடத்தி வைத்திருப்பதாகவும், விடுவிக்க வேண்டும் என்றால் 6 கோடி ரூபாய் பணம் வேண்டும் என்றும் அவரது தந்தை தீபக் மிட்டலுக்கு மர்ம நபர்கள் மேசெஜ் அனுப்பி உள்ளனர். இதுபற்றி தீபக் மிட்டல் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன யாஷ் மிட்டலை தேடி வந்தனர்.

பல்கலைக்கழக சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது, திங்கட்கிழமையன்று யாஷ் மிட்டல் செல்போனில் பேசியபடி பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியே சென்றது தெரியவந்தது. அவர் தொடர்பு கொண்ட எண்ணை சரிபார்த்தபோது, அவரது நண்பர் ரச்சித் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யாஷ் மிட்டலை கொலை செய்து வயல்வெளியில் புதைத்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து ரச்சித்தை போலீசார் கைது செய்தனர்.

பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் உள்ள கஜ்ராவ்லா பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் நண்பர்கள் சேர்ந்து பார்ட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் யாஷ் மிட்டலை, நண்பர்கள் ரிச்சித், சிவம், சுசாந்த், ஷுபம் ஆகியோர் சேர்ந்து அடித்து கொலை செய்ததுடன், உடலை அங்கேயே புதைத்து விட்டு வந்துள்ளனர். இத்தகவலை ரச்சித் போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். அத்துடன், உடலை புதைத்த இடத்தையும் அடையாளம் காட்டினார். உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை வழக்கில் ரச்சித் தவிர சிவம், சுசாந்த் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஷுபம் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பார்ட்டிக்கு அழைத்துச் சென்று நண்பனை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்