அலுவலகத்துக்கு வராதவர்களுக்கு 'வேலை இல்லாவிட்டால் சம்பளம் கிடையாது' திட்டம் - மணிப்பூர் அரசு அறிவிப்பு
அரசு அலுவலர்கள் பணிக்கு வராதபட்சத்தில் சம்பளம் வழங்கப்படாது என்று மணிப்பூர் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;
இம்பால்,
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இதனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதை காரணம் காட்டி, அரசு அலுவலர்கள் பலர் சரிவர பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரசு பொது நிர்வாகத்துறையினர், பணிக்கு வராதவர்களைப் பற்றிய கணக்கெடுப்பில் இறங்கி உள்ளது. இதுகுறித்து துறை செயலாளர் மைக்கேல் அச்சோம், நேற்று முன்தினம் இரவில் வெளியிட்ட அறிக்கையில் "முதல் மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பணிக்கு வராதபட்சத்தில் சம்பளம் வழங்கப்படாது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தவிர்த்து, வேலைக்கு வராதவர்களுக்கு 'நோ ஒர்க் நோ பே' விதி பின்பற்றப்பட்டு சம்பளம் வழங்கப்படாது" என்று கூறப்பட்டு உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 1 லட்சம் அரசு ஊழியர்கள் பணி செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.