10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன - சீரம் நிறுவனம் தகவல்
நாங்கள் கடந்த டிசம்பர் முதலே கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்தி விட்டோம் என்று சீரம் நிறுவனத்தின் உரிமையாளர் ஆதர் பூனவல்ல தெரிவித்தார்.;
புனே,
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து விட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதிலும் மக்களிடம் ஆர்வம் இல்லை.
வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அமைப்பின் வருடாந்திர பொதுக் கூட்டம் நேற்று புனேவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதர் பூனவல்ல பங்கேற்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாங்கள் கடந்த டிசம்பர் முதலே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்தி விட்டோம். அப்போது கையிருப்பில் இருந்த சுமார் 10 கோடி டோஸ்கள் காலாவதியாகி விட்டதால் வீணாகி விட்டது.
பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் தற்போது மக்களிடையே ஆர்வம் இல்லை.
இதனால் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தேவை இல்லை. நாங்கள் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம்.
எங்களின் கோவாவேக்ஸ் தடுப்பூசி அதன் செயல் திறனுக்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பூஸ்டர் தடுப்பூசி அடுத்த 10-15 நாட்களில் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.