ஷார்ட்ஸ், கிழிந்த ஜீன்ஸ் அணிய தடை - ஜெய்ப்பூர் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜார்கண்ட் மகாதேவ் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜார்கண்ட் மகாதேவ் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிழிந்த ஜீன்ஸ், ஷார்ட்ஸ் போன்றவை அணிவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பக்தர்கள் அடக்கமான மற்றும் சாதாரண உடைகளை மட்டுமே அணிய வேண்டும். டவுசர், பெர்முடா ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், நைட் சூட், கிழிந்த ஜீன்ஸ் மற்றும் கவுன் அணிந்து வரும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பக்தர்கள் பேண வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பாவே வாலி மாதா கோவில் நிர்வாகம், பக்தர்கள் தங்கள் தலையை மறைக்குமாறும், வளாகத்தில் ஷார்ட்ஸ் அல்லது கேப்ரி பேன்ட் அணிவதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது.