இலவச திட்டங்களால் நாடு பேரழிவை சந்திக்கும் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்களால் நாடு பொருளாதார பேரழிவை சந்திக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

Update: 2022-08-04 03:45 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விகாஸ் சிங், 'இலவச திட்டங்களை அறிவிக்கும்போது அதற்கான நிதி தேவைப்படுகிறது. நாடு எதிர்கொண்டுள்ள 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இலவச திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து கிடைக்கும்?, யாருடைய பையில் இருந்து எடுக்கப்படுகிறது? என்பதையும் பார்க்க வேண்டும்' என வாதிட்டார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'இலவச வாக்குறுதி திட்டங்கள் உண்மையின் அடிப்படையில் எடுக்கப்படும் வாக்காளர்களின் முடிவை சிதைக்கின்றன. இலவச திட்டங்களை முறைப்படுத்தவில்லை என்றால் நாடு பொருளாதார சீரழிவை சந்திக்கும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்' என வாதிட்டார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விகாஸ் சிங், 'இலவச திட்டங்களுக்கான நிதிக்கான ஆதாரத்தை தெரிவிக்கும் வகையில் மாதிரி தேர்தல் அறிக்கையை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம்' என வாதிட்டார்.

இதற்கு தலைமை நீதிபதி, 'அது வெறும் சம்பிரதாய நடவடிக்கைகளாகவே அமையும், தேர்தல் நடத்தை விதிகள் தேர்தலுக்கு முன்னர்தான் அமலுக்கு வரும். இலவச திட்ட அறிவிப்பு விவகாரம் தீவிரமானது. இதில் ஒன்றும் செய்ய முடியாது என மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் கூற முடியாது' என குறிப்பிட்டார்.

எந்த கட்சி முன்வரும்?

மூத்த வக்கீல் கபில்சிபல், 'இலவச திட்ட அறிவிப்பு விவகாரத்தை நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும்' என தெரிவித்தார்.

அப்போது தலைமை நீதிபதி, 'இலவச திட்ட அறிவிப்பு விவகாரத்தை நாடாளுமன்றம் விவாதிக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?. எந்த அரசியல் கட்சி விவாதிக்க முன்வரும்?. இலவச திட்ட அறிவிப்புக்கு எந்தவொரு கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்காது.

அனைத்து கட்சிகளும் இலவச திட்ட அறிவிப்புகளை வெளியிடுவதை விரும்புகின்றன. அனைவரது கருத்தையும் கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கப்போவதில்லை' என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த 'நிதி ஆயோக்', மத்திய நிதி ஆணையம், சட்ட ஆணையம், ரிசர்வ் வங்கி, ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழுவை ஏற்படுத்துவது குறித்த யோசனைகளை தெரிவிக்க மனுதாரர், மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கும், மூத்த வக்கீல் கபில் சிபலுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்