நிபா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது- கேரள சுகாதாரத்துறை அறிவிப்பு
நிபா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.;
கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு 2 பேர் பலியான நிலையில், தமிழகத்திலும் பீதி பரவியது. இந்த நிலையில் நிபா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
"நிபா வைரஸின் பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்றுகள் விரைவில் விடைபெறும் அறிகுறி ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 42 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் புதிதாக யாருக்கும் தொற்றுகள் ஏற்படவில்லை. 23 பேருக்கு தீவிர காய்ச்சல் பாதிப்பு இருந்து அவர்களுக்கு தொற்று அறிகுறி இருக்கலாம் என்று கருதப்பட்டபோதிலும், அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற முடிவு கிடைத்துள்ளது. மேலும் 39 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். தற்போது 4 பேர் மட்டுமே வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் நிபா தொற்றுக்கு சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களின் உடல் நிலைமையும் சீராக உள்ளது. 9 வயது சிறுவன் ஒருவனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது, என்றபோதிலும் அவனது உடல்நலம் தேறி வருகிறது. 19 குழுக்களின் கீழ் விரிவான தொற்று தொடர்பு பட்டியலைத் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.