இஸ்லாமிய ஆண்களுக்கு 3 மனைவிகள் இருக்க கூடாது; மனைவிக்கு பாதி சொத்தை வழங்க வேண்டும் - அசாம் முதல்-மந்திரி
பாஜக ஆளும் அசாமில், இஸ்லாமிய மதத்தை சார்ந்த எந்தவொரு ஆணும், மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.;
கர்பி அங்லாங் (அசாம்),
பாஜக ஆளும் வடகிழக்கு மாநிலமான அசாமில், இஸ்லாமிய மதத்தை சார்ந்த எந்தவொரு ஆணும், மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-
"எந்த முஸ்லீம் ஆணும் மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் அஸ்ஸாம் அரசு தெளிவாக உள்ளது. தலாக் வேண்டாம், சட்டப்படி விவாகரத்து கொடுங்கள்.
மகன்களைப் போல மகள்களுக்கும் சொத்தில் சம பங்கு வழங்கப்பட வேண்டும். சொத்தில் 50 சதவீத பங்கை மனைவிக்கு கொடுங்கள். இந்த விஷயங்களில், அரசாங்கத்தின் கருத்தும் சாதாரண முஸ்லிம் மக்களின் கருத்தும் ஒன்று போல உள்ளது.
பிரதமர் மோடியின் கவனம், வடகிழக்கு மாநிலங்களை சென்றடைவதன் காரணமாக இப்போது வடகிழக்கு மாணவர்களுக்கு எதிரான இனப் பாகுபாடு மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது" என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியை புகழ்ந்து பேசி வரும் பிஸ்வா சர்மா ஆஎஸ்எஸ் சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. அவர் கூறியதாவது, "அனைத்து முஸ்லீம் மக்களும் உண்மையில் ஒரு இந்து தான். மாதம் மாறி சென்றவர்களை மீண்டும் மறு மதமாற்றம் செய்வது என்பதற்கு ஒரே ஒரு வழி தான் சாத்தியம். அது தான் சரியான கல்வி.
ஆனால் அதேநேரம் இதற்காக அனைவரும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் அல்லது தெய்வத்தை வணங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. தென்கிழக்கு ஆசியப் பகுதி இஸ்லாமிய நாகரிகங்களால் தீண்டப்படாமல் இருக்க அசாம் தான் முக்கிய காரணம்" என்றார்.
இந்நிலையில், மீண்டும் இஸ்லாமிய மக்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.