மந்திரிகளுக்கு நோ புதிய கார்... அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் கட்டாயம்: மிசோரம் புதிய அரசு அதிரடி

மிசோரம் முதல்-மந்திரியாக பதவியேற்ற லால்துஹோமா பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

Update: 2023-12-10 09:36 GMT

அய்சால்,

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியில் இருந்து மிசோ தேசிய முன்னணி 10 இடங்களிலும் பாஜக 2, காங்கிரஸ் 1 இடத்திலும் வென்றன. ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா அம்மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஹரிபாபு கம்பம்பட்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். மிசோரம் முதல்-மந்திரியாக பதவியேற்ற உடனேயே லால்துஹோமா பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய இனி அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை கட்டாயப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மிசோரம் மாநில ஊழல்களை சிபிஐ விசாரிக்கும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மிசோரம் மாநில அரசு முறைப்படியான ஒப்புதல் வழங்கும். மிசோரம் மாநிலத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்ற மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமாக, பொதுவாக எம்.எல்.ஏக்களுக்கு அரசு பணத்தில் கார்கள் வழங்கப்படும். இதற்காக பொதுமக்கள் பணம் செலவிடப்படும். ஆனால் எம்.எல்.ஏக்களுக்கு புதியதாக அரசு பணத்தில் கார்கள் வாங்க கூடாது என தடையை விதித்துள்ளார் முதல்-மந்திரி லால்துஹோமா. அத்துடன் மந்திரிகளாக பதவியேற்றவர்கள் புதிய கார்களை வாங்காமல் ஏற்கனவே மந்திரிகள் பயன்படுத்திய பழைய கார்களைத்தான் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார்.

முதல்-மந்திரி லால்துஹோமா பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள் மிசோரம் மாநிலத்தில் பேசுபொருளாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்