மந்திரி பதவிகள் பங்கீடு குறித்து பாஜகவுடன் எந்த விவாதமும் நடைபெறவில்லை - ஏக்நாத் ஷிண்டே
உத்தவ் தாக்கரே பதவி விலகியதை தொடர்ந்து மராட்டியத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு உள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்த உத்தவ் தாக்கரே நேற்றிரவு திடீரென ராஜினாமா செய்ததை தொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தவ் தாக்கரே பதவி விலகியதை தொடர்ந்து மராட்டியத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு உள்ளது.
அந்த கட்சிக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 39 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 11 சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது. முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என்றும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்னாத் ஷிண்டே துணை முதல் மந்திரியாக பதவியேற்கக் கூடும் என்றும் மராட்டிய அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே கூறியிருப்பதாவது,
"மந்திரி பதவிகள் பங்கீடு குறித்து பாஜகவுடன் எந்த விவாதமும் நடைபெறவில்லை. விரைவில் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும்.அதுவரை, புதிய மந்திரிசபை பட்டியல் மற்றும் அது பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்.
சிவசேனாவின் நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் கருத்துப்படி இந்துத்துவா கொள்கையை பின்பற்றுவதே கட்சியின் கவனம். மராட்டியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொகுதியின் வளர்ச்சிப் பணிகளில் எங்கள் கவனம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை மராட்டிய பா.ஜ.க. தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இன்று சந்தித்து அரசு அமைக்க உரிமை கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மராட்டிய முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் இன்று இரவு 7 மணிக்கு பதவியேற்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.