டெல்லியில் கொரோனாவின் புதியவகை மாறுபாட்டின் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனாவின் பி.எப்.7 மாறுபாட்டின் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் புதிய வகை பி.எப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது.
இந்நிலையில் டெல்லியில் கொரோனாவின் பி.எப்.7 மாறுபாட்டின் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கொரோனாவின் மறு ஆய்வுக்கூட்டத்திற்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீனாவிலும் பல நாடுகளிலும் புதியவகை கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. . தேசிய தலைநகரில் கொரோனா ஓமிக்ரான் துணை மாறுபாடு பிஎப்.7 இன் பாதிப்புகள் ஒருவருக்கு கூட உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை.
மாநில சுகாதாரத் துறை அனைத்து கொரோனா பாதிப்புகளின் மரபணு வரிசைமுறையை ஆய்வு செய்து வருகிறது. டெல்லியில் ஏழு வெவ்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட கழிவுநீர் மாதிரிகளில் கூட மாறுபாடு கண்டறியப்படவில்லை. டெல்லியில் பதிவாகும் 92 சதவீத வழக்குகள் எக்ஸ்.பி.பி (XBB) மாறுபாடு அல்லது அதன் துணை மாறுபாடுகள்.
கொரோனாவின் புதிய அலைக்கு டெல்லி அரசு முழுமையாக தயாராக உள்ளது. தற்போது, தினமும் 2,500 சோதனைகள் செய்யப்படுகின்றன. இப்போது ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சோதனைகளை நடத்தும் திறன் எங்களிடம் உள்ளது, அதையும் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக எங்களிடம் 8,000 படுக்கைகள் உள்ளன. இப்போது, நாங்கள் மேலும் 36 ஆயிரம் படுக்கைகள் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
2021 இல் காணப்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை தொடர்பாக பேசிய அவர், "இப்போது நகரத்தில் போதுமான சேமிப்புத் திறன் உள்ளது. கடந்த முறை ஆக்சிஜனை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது 928 மெட்ரிக் டன் ஆக்சிஜனை சேமிக்கும் திறன் உள்ளது. தேவைப்பட்டால் 6,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்படும். 2021ல் பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை வாங்க டேங்கர்கள் இல்லை. இப்போது, ஆக்ஸிஜனை வாங்க எங்களிடம் 15 டேங்கர்கள் உள்ளன.
தற்போது எங்களிடம் 380 ஆம்புலன்ஸ்கள் உள்ளன, மேலும் ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கான உத்தரவை நாங்கள் வழங்கியுள்ளோம். கொரோனா பரவல் தொடர்பாக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 100 சதவீத பயனாளிகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. 24 சதவீதம் பேர் மட்டுமே முன்னெச்சரிக்கை மருந்தை எடுத்துள்ளனர். மக்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்துகளை வழங்குவதற்காக, வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசித்தோம். மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, உத்தரவு பிறப்பிக்கும் போது நாங்கள் அதனை செயல்படுத்துவோம்" என்றும் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.