நிதிஷ் குமாரின் ஆதரவாளர், அமித்ஷாவுடன் சந்திப்பு - பீகார் அரசியலில் சலசலப்பு
நிதிஷ் குமாரின் ஆதரவாளர், அமித்ஷாவை சந்தித்ததால் பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் தலைவருமான ஜித்தன் ராம் மஞ்சி, ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்து வருகிறார். அவரது மகன் மாநில மந்திரியாகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜித்தன் ராம் மஞ்சி நேற்று திடீரென மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். தங்கள் கட்சியின் நீண்டகால கோரிக்கையான தஷரத் மஞ்சிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அமித்ஷாவை சந்தித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேநேரம் மஞ்சியின் இந்த சந்திப்பு மாநில அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை நிதிஷ்குமார் தொடங்கி உள்ள நிலையில், அவரது கூட்டணியில் இருக்கும் ஜித்தன் ராம் மஞ்சி அமித்ஷாவை சந்தித்து பேசியிருப்பது மீண்டும் அவர் பா.ஜனதா கூட்டணிக்கு தாவும் சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.
ஆனால் இந்த கருத்துகளை அவர் நிராகரித்தார். அத்துடன் அமித்ஷாவை சந்தித்தபின் நேராக நிதிஷ்குமாரையும் சந்திக்க சென்றார்.