பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி

பீகார் மாநில சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.;

Update: 2022-08-24 11:58 GMT

பாட்னா,

பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியே வந்த நிதிஷ் குமார், பின்னர் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியானார்.

பீகார் மாநில முதல்-மந்திரியாக 8-வது முறையாக அவர் கடந்த 10-ந்தேதி பதவியேற்று கொண்டார். பீகார் மாநில துணை முதல்-மந்திரியாக ராஷ்டீரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்று கொண்டார்.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட பீகார் சட்டசபையில் நிதிஷ் குமாருக்கு 165 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்ததாக தகவல் வெளியானது. பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள். இதனால் நிதிஷ்குமார் அரசு பெரும்பான்மையை எளிதாக நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற வாக்கெடுப்பில் தனது அரசுக்கு பெரும்பான்மையை நிதிஷ் குமார் காட்டினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்