இந்தியா கூட்டணிக்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டார் நிதிஷ் குமார்.. காங். மூத்த தலைவர் பரபரப்பு பேட்டி

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், கட்சியின் சில முடிவுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

Update: 2024-02-07 07:43 GMT

லக்னோ:

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் இருந்து முக்கிய தலைவரான நிதிஷ் குமார் சமீபத்தில் விலகி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என தலைவர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா கூட்டணி என்ற ஒரு கூட்டணி இல்லை என்றே நான் நினைக்கிறேன். இந்தியா கூட்டணியை உருவாக்கியபோது, அது பிறந்தவுடன் சில நோய்களால் பாதிக்கப்பட்டது. பாதிப்பு அதிகரித்து ஐ.சி.யு. மற்றும் வெண்டிலேட்டரில் வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் பாட்னாவில் அந்த கூட்டணிக்கு நிதிஷ் குமார் இறுதிச்சடங்கு செய்துவிட்டார். எனவே, இனி அந்த கூட்டணி இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்சியின் சில முடிவுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் ஆச்சார்யா பிரமோத், சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து, சம்பால் மாவட்டத்தில் நடைபெற உள்ள கல்கி கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார். உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆத்தியநாத்துக்கும் அழைப்பு விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்