பெங்களூருவில் இருந்து போதை பொருள் கடத்திய நைஜீரியா இளம்பெண் கைது
பெங்களூருவில் இருந்து போதை பொருள் கடத்திய நைஜீரியா இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெரும்பாவூர்:
எர்ணாகுளம் நகர் அருகே கலூர் பகுதியில் எம்.டி.எம்.ஏ. போதை பொருள் விற்பனை செய்வதாக பாலாரிவட்டம் போலீசாருக்கு கடந்த ஜூலை மாதம் தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் விரைந்து சென்று எர்ணாகுளம் நகரை சேர்ந்த ஹாருன் சுல்தான் (வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதை பொருள் கடத்தல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஓகா போரி ஏசே இம்மானுவேல் (38) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு போதை பொருட்களை கடத்தி வந்து, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஓகா போரி ஏசே இம்மானுவேல் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து நைஜீரியா நபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் முக்கிய புள்ளியாக செயல்பட்டது நைஜீரியா நாட்டை சேர்ந்த ஏஞ்சலோ டாக்வியோ போர்பி (26) தெரியவந்தது. அவர் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம் பகுதியில் தங்கி இருந்து, போதை பொருள் விற்பது, அதற்கான பண பரிமாற்றம் என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்.
இதைதொடர்ந்து பாலாரிவட்டம் போலீசார் தனிப்படை அமைத்து, நைஜீரியா இளம்பெண்ணை கைது செய்ய முயன்றனார். ஆனால், அவர் தப்பி விட்டார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த ஏஞ்சலோ டாக்வியோ போர்பியை கைது செய்து எர்ணாகுளத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து 4½ கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. நைஜீரியாவில் இருந்து பெங்களூருவுக்கு போதை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.